Thiru N. M. R. Subbaraman. (14 August 1905 – 25 January 1983) was an Indian freedom fighter and politician
மகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்?
தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியை அறியாதவர் யாரும் இல்லை. ஆனால், மதுரை காந்தி என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு சுதந்திர போராட்ட வீரர் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவார்கள். நிலாவில் முதலில் கால் வைத்தவர் பெயர் மட்டுமே இந்த உலகம் நினைவில் கொண்டுள்ளது என்ற கூற்றினை போல.. சுதந்திர போராட்டத்திலும் முன்னின்ற சில தலைவர் பெயர் மட்டுமே வரலாற்றில் பிரபலமாக அறியப்பட்டு வருகிறது.
விடுதலைக்காக தங்கள் பொருள், நிலம், உயிர் என தியாகம் செய்த பலரது வரலாறு யாரும் அறியாத, காணாத சுவடுகளாய் மறைந்துக் கொண்டிருக்கின்றன. காந்தியின் வழியை பின்தொடர்து விடுதலைக்காக போராடிய விடுதலை போராட்ட வீரர் தான் என்.எம்.ஆர். சுப்பராமன் என்கிற மதுரை காந்தி.
இவர் மதுரை நாட்டாண்மை மல்லி குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராயலு அய்யர் - காவேரி அம்மாள் ஆவர். இந்த தம்பதிக்கு சுப்பராமன் இரண்டாவது குழந்தை. பர்வதவர்தனி என்பவரை சுப்பராமன் திருமணம் செய்துக் கொண்டார். காந்தியின் வழியில் நின்று விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால் இவரை மதுரை காந்தி என்று மதுரை மக்கள் அழைத்தனர்.
தேசிய கீதம் இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் கலகத்தாவில் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றார் சுப்பராமன். இவரது குடும்பம் மிகுந்த செல்வாக்கும், செல்வமும் கொண்ட பணக்கார குடும்பம். ஆயினும், இவர் இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார். விடுதலைக்காக போராடி இவர் கடுமையான சிறை தண்டனைகளும் பெற்றிருக்கிறார்.
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்ற போது தான். இவர் கோவை அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் வேதாரண்யம் சர்தார் அ.வேதரத்தினம் போன்றவர்களுடன் நட்பு கொண்டார். இந்த அற்புதமான நட்பு இவர்களை ஒன்றாக இணைந்து சுதந்திரத்திற்காக போராட வைத்தது. இவர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிர விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி இவர் காந்தியின் சமூக கொள்கைகளை குறிக்கும் சர்வோதய திட்டங்களிலும் தங்களது பங்களிப்பை அளித்தனர்.
பூதானம்:
சுப்பராமன், தனது சொந்த நிலங்களில் நூறு ஏக்கர் விளைநிலங்களை சர்வோதய சங்க தலைவர் வினோபா பாவே வகுத்த திட்டத்தின் படி, ஏழை மக்களுக்கு பூதானமாக அளித்தார். பூதானம் என்பது பூமி தானம் ஆகும். இவர் சுதந்திர போராட்ட வீராரக மட்டுமின்றி சிறந்த சர்வோதய தொண்டராகவும் காணப்பட்டார்.
காக்கிநாடாவில் 1923ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மதுரையின் பிரதிநிதியாக பங்கெடுத்துக் கொண்டார் சுப்பராமன். இந்த மாநாட்டின் போது தான், இவரது விடுதலை போராட்ட குணம் அதிகமானது. 1930ம் ஆண்டு இவரை மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்தனர்.
1934ம் ஆண்டு தீண்டாமைக்கு எதிராக இந்தியா முழுவதும் காந்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். காந்தியின் அந்த பயணத்தில் தன்னையும் ஈடுப்படுத்திக் கொண்டார் சுப்பராமன். இந்த பயணத்தின் போது காந்தி மதுரை வந்த போது, சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி சென்றார் என்று கூறப்படுகிறது.
நகராட்சி தலைவர்:
1935 - 1942 வரை சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவர் பதவி வகித்தார். அதுமட்டுமின்றி 1934 மற்றும் 1946ம் ஆண்டுகளில் சென்னை மாநில சட்டபேரவை உறுப்பினராக பதவி வகித்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு கடுமையான சிறை வாசமும் அனுபவித்தார் சுப்பராமன்.
நாடாளுமன்ற உறுப்பினர்:
இந்தியா விடுதலை பெற்ற பிறகு மதுரை காந்தி என்கிற சுப்பராமன் தொடர்ந்து மக்களுக்கு நிறைய நற்பணிகள் செய்துக் கொடுத்தார். 1962-67 வரை இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை போராட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் என பல்வேறு காலக்கட்டத்தில் மதுரை காந்தி அவர்கள் மக்களுக்கு நிறைய பொதுநல தொண்டாற்றி இருக்கிறார்.
சுப்பராமனின் பொதுநல தொண்டினை பாராட்டும் வகையில் இவரது நூற்றாண்டு பிறந்தநாளில் (2005ல்) சுப்பராமன் நினைவு தபால் தலையை இந்திய அரசின் அஞ்சல் துறை வெளியிட்டது. மதுரையில் சுப்பராமன் பெயரில் மதுரை மாநகராட்சி அமைத்துள்ளது. மேலும், தெற்கு வாசல் - வில்லாபுரத்தை இணைக்கம் மேம்பாலத்திற்கு என்.எம்.ஆர் சுப்பராமனம் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆணையை வெளியிட்டவர் அன்று தமிழக முதல்வராக இருந்த மறைந்த மு. கருணாநிதி.
மதுரை மகப்பேறு மருத்துவமனை சுப்பராமன் நன்கொடையாக அளித்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கும் உதவி செய்திருக்கிறார் சுப்பராமன். இவரது பொதுநல உதவியை போற்றி, அந்த மருத்துவ மனைக்கு சுப்பராமனின் தந்தை என்.எம். இராயலு அய்யர் மகப்பேறு மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மருத்துவமனை முன்பாக காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.
Comments
Post a Comment